வெளிநாட்டில் தொழில் புரிவோருக்கு, சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ரூ.10,000 வழங்கப்படும் எனக் கூறும் யூடியூப் வீடியோ ஒன்றில் எந்தவிதமான உண்மையும் இல்லை என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
அந்த மோசடி வீடியோவில், தொழிலாளர்கள் தங்களுடைய கடவுச்சீட்டு நகலை இலங்கையில் உள்ள பணியக அலுவலகங்களில் சமர்ப்பித்து பணத்தை பெறலாம் என கூறப்பட்டுள்ளது. இது முற்றிலும் பொய்யான தகவலாகும்.
இவ்வாறான தவறான தகவல்களால் எவரும் ஏமாறக்கூடாது என பொதுமக்களுக்கு பணியகம் கேட்டுக்கொண்டுள்ளது. மேலும், எதிர்காலத்தில் இப்படியான மோசடிகளை பரப்புவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அறிவித்துள்ளது.
அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் பணியகத்தின் உத்தியோகபூர்வ இணையதளம், பேஸ்புக், யூடியூப் மற்றும் டிக்டொக் பக்கங்களிலேயே வெளியிடப்படும் என்பதை பொது மக்கள் நினைவில் கொள்ளுமாறு பணியகம் வலியுறுத்தியுள்ளது.
0 Comments