தண்டப்பணம் செலுத்த முடியாமல் உயிரிழந்த தந்தை – சோககரமான சம்பவம்

வாழைச்சேனை நாசிவன்தீவு ஆற்றில் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட நபர் ஒருவர் கடந்த வாரம் கசிப்பு வியாபாரம் தொடர்பாக கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தால் ரூ.30,000 தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், அந்தத் தொகையை செலுத்த முடியாததால் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

முறக்கொட்டாஞ்சேனை சேமன் வீதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான இவர், சந்திவெளி பொலிஸாரால் கசிப்பு வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். பின்னர் நீதிமன்ற தண்டப்பணத்தை செலுத்த பணம் தேவைப்பட்டதால் தனது மகளிடம் ரூ.30,000 கோரிய நிலையில், மகள் பணம் இல்லையென்று தெரிவித்துள்ளார்.

இந்த மனஅழுத்தத்துடன் கடந்த புதன்கிழமை வீட்டை விட்டு வெளியேறிய இவர் வீடு திரும்பாததால், உறவினர்கள் தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று (ஏப்ரல் 10) இரவு 10 மணியளவில் பொதுமக்கள் நாசிவன்தீவு ஆற்றில் சடலம் ஒன்றைப் பார்த்து பொலிஸாருக்கு தகவல் வழங்கினர். சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், அந்த சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகள் வாழைச்சேனை பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Post a Comment

0 Comments